Jesus Power
Ministries

✦
✦
Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

பிறரின் கருத்து என்ன?

பிறரின் கருத்து என்ன?

«“இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்?” — மத்தேயு 11:18»

📖 இன்றைய வேத பகுதி: மத்தேயு 11:1–19

அனைவரையும் திருப்திப்படுத்த முடியுமா? :

ஒரு தேவனுடைய ஊழியர் தன்னுடைய ஊழியத்தின் துவக்க காலத்தில் மிகுந்த வறுமை நிலையில் வாழ்ந்தார். அந்த நாட்களில் அவர் யாருக்கும் விரும்பத்தக்க நிலையில் இல்லை.

“இவர் உண்மையான ஊழியர் என்றால் ஏன் இத்தனை வறுமை?” என்று பலர் கேட்டனர்.

சில வருடங்களுக்குப் பிறகு, அவர் கொஞ்சம் செழிப்பான நிலைக்கு வந்தார். வாழ்க்கையில் சில வசதிகள் ஏற்பட்டன. அவர் வசதியாக வாழத் தொடங்கியபோது, அதே மக்கள் வேறு விதமாகக் கேட்க ஆரம்பித்தனர்.

“இவர் உண்மையான ஊழியர் என்றால் ஏன் இந்த வசதியான வாழ்க்கை?” என்றார்கள்.

ஒரு காலத்தில் அவருடைய வறுமை குறையாகக் காணப்பட்டது.

பின்னர் அவருடைய வசதி குறையாகக் காணப்பட்டது.

இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ள முடியும்?

சிலருடைய மனதில் நம்மைக் குறித்து தவறான அபிப்பிராயம் இருந்தால், நாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது.

தாழ்ந்தாலும் குறை, உயர்ந்தாலும் குறை :

செவ்வையற்ற மனதை உடைய மக்களால் இந்த உலகம் நிறைந்திருக்கிறது.

நாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும், நம்மைக் குறித்து ஏதாவது ஒரு குறையைச் சொல்லக்கூடியவர்கள் இருப்பார்கள்.

நாம் தாழ்ந்து நின்றால், நம்மை அற்பமாக எண்ணி அசட்டை செய்வார்கள்.

நாம் உயர்ந்து நின்றால், பொறாமையினால் பொல்லாதவற்றைச் சிந்திப்பார்கள்.

நாம் அமைதியாக இருந்தால், பலவீனமானவர் என்பார்கள்.

நாம் தைரியமாகப் பேசினால், பெருமையுள்ளவர் என்பார்கள்.

நாம் எளிமையாக வாழ்ந்தால், திறமையில்லாதவர் என்பார்கள்.

நாம் முன்னேறினால், உலகப்பிரகாரமாகிவிட்டார் என்பார்கள்.

எனவே, மற்றவர்களின் மனநிலைக்கேற்ப நம்முடைய வாழ்க்கையை வளைத்து நெளித்து வாழ்ந்து காட்ட முயற்சிப்பது பயனற்றது.

ஏனென்றால், மற்றவர்களின் கருத்துகளை நாம் எப்போதும் கட்டுப்படுத்த முடியாது.

பிறரின் கருத்தை முழுவதும் புறக்கணிக்கலாமா?

மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை முழுவதுமாக அசட்டை செய்ய வேண்டும் என்பதல்ல.

சில நேரங்களில் பிறருடைய கருத்துக்கள் நம்முடைய குறைகளை உணர்த்தலாம்.

அவர்களுடைய விமர்சனங்கள் நம்மைத் திருத்திக்கொள்ள உதவலாம்.

நம்முடைய செயல்களில் உண்மையாகவே தவறு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் தாழ்மையும் நமக்கு இருக்க வேண்டும்.

ஆனால், பிறருடைய நல்ல அபிப்பிராயத்தைப் பெறுவதற்காக மட்டுமே நாம் வாழக்கூடாது.

ஏனென்றால், ஒருவருக்கு நம்மேல் நல்ல எண்ணம் இல்லையென்றால், நாம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும் அவர்களுடைய நல்ல அபிப்பிராயத்தைப் பெற முடியாமல் போகலாம்.

எனவே, பிறருடைய கருத்தை கேட்பது நல்லது.

ஆனால், பிறருடைய கருத்தே நம்முடைய வாழ்க்கையை நடத்தும் அதிகாரமாக மாறிவிடக் கூடாது.

யோவானையும் குற்றம் சொன்னார்கள் :

சமுதாயத்தோடு அதிகமாகக் கலவாமல், ஆழ்ந்த துறவற வாழ்க்கை வாழ்ந்த யோவானைப் பார்த்து, பரிசேயர்கள்:

“பிசாசு பிடித்தவன்”, என்று கூறினார்கள்.

யோவான் மற்றவர்களிலிருந்து விலகி, கடினமான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்தார்.

ஆனால், அதிலும் மக்கள் குறை கண்டார்கள்.

அதே நேரத்தில், இயேசு சமுதாயத்தின் நடுவில் வாழ்ந்தார்.

மக்களோடு தொடர்புகொண்டார்.

பாவிகள் என்று ஒதுக்கப்பட்டவர்களிடமும் சென்றார்.

அவர்களோடு பேசினார்.

அவர்களுக்கு இரக்கம் காட்டினார்.

ஆனால், அவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவரை:

“பாவிகளின் தோழன்”

என்று குற்றம் சாட்டினார்கள்.

யோவான் விலகி வாழ்ந்தார்; குற்றம் சொன்னார்கள்.

இயேசு மக்களோடு வாழ்ந்தார்; அவரையும் குற்றம் சொன்னார்கள்.

இரண்டு வாழ்க்கை முறைகளிலும் குறை கண்டார்கள்.

இதற்குக் காரணம் யோவானின் வாழ்க்கையோ, இயேசுவின் வாழ்க்கையோ அல்ல.

அவர்களைப் பார்க்கின்றவர்களின் மனநிலையே காரணமாக இருந்தது.

தேவனுக்கு முன்பாக எது சரி? :

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு முன்பாக நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி:

“தேவனுடைய பார்வையில் நான் சரியாக இருக்கிறேனா?” என்பதாகும்.

தேவ சமுகத்தில் நல்லது எது, தீயது எது என்பதை நிதானித்து அறிந்து, குற்றமற்ற மனசாட்சியுடன் நாம் வாழ வேண்டும்.

நம்முடைய செயல்களின் பின்னால் இருக்கும் நோக்கம் சரியாக இருக்கிறதா?

நாம் செய்கின்றது தேவனுக்குப் பிரியமானதா?

நம்முடைய மனசாட்சி நம்மைக் குற்றப்படுத்துகிறதா?

தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக நாம் வாழ்கிறோமா? என்பதையே முதலில் ஆராய வேண்டும்.

மனிதர்கள் நம்மைப் பாராட்டினாலும், தேவனுடைய பார்வையில் தவறாக இருந்தால் அது பயனற்றது.

அதேபோல, மனிதர்கள் நம்மைக் குற்றப்படுத்தினாலும், தேவனுடைய பார்வையில் நாம் உண்மையோடும் நேர்மையோடும் நடந்துகொண்டிருந்தால், பிறருடைய கருத்துக்கள் நம்மை ஆளக்கூடாது.

சரியான பார்வை யாருடையது? :

நம்மைக்குறித்தும், நம்முடைய செயல்களைக்குறித்தும், அதன் பின்னால் உள்ள நம்முடைய மனநோக்கங்களைக்குறித்தும் ஒரு சரியான பார்வை நமக்கு வேண்டும்.

சில நேரங்களில் மனிதர்கள் நம்முடைய செயல்களை மட்டுமே பார்க்கிறார்கள்.

ஆனால், தேவன் நம்முடைய இருதயத்தையும் நோக்கத்தையும் பார்க்கிறார்.

ஒருவர் நம்முடைய செயல்களைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.

நம்முடைய நல்ல நோக்கங்களைக்கூட சந்தேகப்படலாம்.

நாம் செய்யாத காரியங்களைக்கூட நம்மேல் சுமத்தலாம்.

இத்தகைய நேரங்களில், எல்லோரிடமும் நம்மை நிரூபிக்க முயற்சி செய்து மன அமைதியை இழக்க வேண்டியதில்லை.

நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தேவனுடைய பார்வையில் நாமும் நம்முடைய செயல்களும் குற்றமற்றிருக்கிறதா என்பதே முக்கியம்.

அப்படியிருக்கும்போது, பிறர் நம்மைக் குறித்து என்ன அபிப்பிராயப்படுகிறார்கள் என்பதைப்பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

பிறரின் கருத்தால் அல்ல, தேவனுடைய சித்தத்தால் :

ஒரு மனிதன் பிறரின் கருத்துக்களுக்காக வாழ ஆரம்பித்தால், அவன் ஒருபோதும் சுதந்திரமாக வாழ முடியாது.

ஒருவரைத் திருப்திப்படுத்த முயற்சிப்பான்.

மற்றொருவர் வேறு விதமாக நினைப்பார்.

அவரைத் திருப்திப்படுத்த முயற்சிப்பான்.

இறுதியில், எல்லோருடைய கருத்துக்களுக்கும் அடிமையாகி விடுவான்.

ஆனால், தேவனுடைய சித்தத்தைத் தேடி வாழும் மனிதன் ஒரு நிலையான வாழ்க்கையை வாழ முடியும்.

அவன் திருத்தப்பட வேண்டிய இடத்தில் திருத்திக்கொள்வான்.

தவறு இருந்தால் மனந்திரும்புவான்.

ஆனால், ஆதாரமற்ற விமர்சனங்களாலும் தவறான அபிப்பிராயங்களாலும் தனது வாழ்க்கையின் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டான்.

நம்முடைய வாழ்க்கையை வழிநடத்த வேண்டியது மக்களின் கருத்து அல்ல; தேவனுடைய சித்தமே.

💭 இன்று சிந்திப்போம் :

பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயத்தோடு நான் வாழ்கிறேனா?

மனிதர்களுடைய பாராட்டைப் பெறுவதற்காக நான் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறேனா?

பிறருடைய விமர்சனங்களில் உண்மை இருந்தால் அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறேனா?

ஆதாரமற்ற கருத்துக்களால் நான் தேவையில்லாமல் மனம் உடைகிறேனா?

என்னுடைய செயல்களும் அதன் பின்னால் உள்ள என் நோக்கங்களும் தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கிறதா?

அனைவருடைய நல்ல அபிப்பிராயத்தையும் பெறுவது நம்முடைய இலக்காக இருக்கக்கூடாது. தேவனுடைய பார்வையில் குற்றமற்ற மனசாட்சியுடன் வாழ்வதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.

🙏 ஜெபம் :

அன்பின் பரலோகப் பிதாவே,

மனிதர்களுடைய கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் அடிமையாகி வாழாமல், உம்முடைய சித்தத்தின்படி வாழ எனக்கு கிருபை தாரும்.

கர்த்தாவே, பிறருடைய விமர்சனங்களில் உண்மை இருக்கும்போது அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு என்னைத் திருத்திக்கொள்ளும் இருதயத்தைத் தாரும்.

அதேவேளையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் தவறான அபிப்பிராயங்களாலும் என் மன அமைதியை இழக்காமல் இருக்க உதவி செய்யும்.

என்னுடைய வாழ்க்கை, செயல்கள் மற்றும் அதன் பின்னால் இருக்கும் என் மனநோக்கங்கள் அனைத்தும் உம்முடைய பார்வையில் சரியாக இருக்கும்படி என்னை நடத்தும்.

மனிதர்களுடைய பாராட்டைத் தேடி வாழாமல், உம்முடைய அங்கீகாரத்தைத் தேடி வாழ எனக்கு கிருபை தாரும்.

நான் தாழ்ந்து இருந்தாலும், உயர்ந்து இருந்தாலும், குறைவில் இருந்தாலும், நிறைவில் இருந்தாலும், உமக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ உதவி செய்யும்.

எல்லோரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்து என் வாழ்க்கையை வீணாக்காமல், உம்முடைய சித்தத்தை அறிந்து அதன்படி நடக்க எனக்கு ஞானத்தைத் தாரும்.

என் மனசாட்சி உம்முடைய சத்தியத்திற்கு முன்பாக குற்றமற்றதாக இருக்கச் செய்து, மனிதர்களுடைய கருத்தை விட உம்முடைய பார்வைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உதவி செய்யும்.

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமென்.