Jesus Power
Ministries

LUXORA GROUP

Ideas. Innovation. Impact.

Talk to Our Team

+91 98765 43210 hello@example.com

Mon–Sat: 9:00 AM–6:00 PM

Get Started

போதகரின் சாட்சி

என்னுடைய வாழ்க்கை தேவனுடைய அளவற்ற கிருபை, மற்றும் வல்லமை, மாறாத உண்மைத்தன்மை ஆகியவற்றின் உயிருள்ள சாட்சியாகும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தேவன் என்னை வழி நடத்தி, காத்து, தமது நோக்கத்திற்காக உருவாக்கியிருக்கிறார்.

நான் 1968 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தேன். என் தாயார் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்

என் தந்தையார் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, எங்கள் குடும்பம் என் தந்தையின் வழக்கப்படி இந்து மதத்தைப் பின்பற்றியது.

எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே என் தந்தையார் காலமானார். அதன் பிறகு என் தாயார் என்னை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். சிறு வயதிலிருந்தே ஆலயத்திற்குச் சென்றாலும், இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட இரட்சகராக அறிந்து கொள்ளவில்லை. அது கிறிஸ்துவோடு உறவில்லாத வாழ்க்கையாக மட்டும் இருந்தது. இளமைக் காலத்தில் திருடுதல், சண்டையிடுதல், கீழ்ப்படியாமை போன்ற பாவமான வாழ்க்கையில் வாழ்ந்தேன்.

என் சிறுவயது கடுமையான வறுமையால் நிரம்பியிருந்தது. உணவு, உடை, தங்குவதற்கான இடம் கூட இல்லாத நாட்கள் ஏராளம். இருந்தபோதிலும், என் வாழ்க்கைக்காக தேவன் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார்.



ஒருநாள் என் தாயாரின் கட்டாயத்தின் பேரில் ஒரு ஆவிக்குரிய சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கு இரண்டாவது வாரத்திலேயே, தேவனுடைய ஊழியக்காரர் மூலம், "உன்னை என் ஊழியத்திற்காகத் தெரிந்து கொண்டேன்" என்று தேவன் என்னோடு பேசினார். அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் மாறியது. தேவனைத் தேட ஆரம்பித்து, சபை ஊழியங்களில் ஆர்வமாக ஈடுபட்டேன்.18 வயதில், இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு உண்மையான இரட்சிப்பைப் பெற்றேன்.

1994ஆம் ஆண்டு, தேவன் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை அருளினார். இன்று எங்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தை நடத்த பல்வேறு வேலைகளைச் செய்தாலும், மக்களை கிறிஸ்துவிடம் நடத்த வேண்டும் என்ற பாரமும், சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்ற தாகமும் என் இருதயத்தில் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

2005ஆம் ஆண்டு, எங்கள் வீட்டில் தேசத்திற்காக ஜெபிக்கும்படி ஒரு சிறிய ஜெப ஐக்கியம் ஆரம்பமானது. ஆனால் அப்போது முழுநேர ஊழியத்திற்கு என்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கவில்லை. குடும்பப் பொறுப்புகள், பொருளாதார சுமைகள் ஆகியவற்றால் தேவனுடைய அழைப்பை ஏற்கத் தயங்கினேன். இருந்தபோதிலும், குடும்பத்தில் ஏற்பட்ட சிரமங்கள், என் மனைவி மற்றும் பிள்ளைகளின் உடல்நலப் குறைபாடுகள், மற்றும் தேவனுடைய உள்ளார்ந்த சத்தம் மூலம் ஆண்டவர் தொடர்ந்து என்னை அழைத்தார்.

ஒரு முறை மூன்று நாள் உபவாச ஜெபத்தில் இருந்தபோது, தேவனுடைய அழைப்பை நான் வேண்டுமென்றே புறக்கணித்தேன். அதற்குப் பிறகு நான் மரணத்தின் விளிம்பிற்கு செல்லும் அளவுக்கு மிகவும் மோசமான உடல்நலக் குறைவுக்குள்ளானேன். அப்போது ஆண்டவர், "என் அழைப்புக்குக் கீழ்ப்படிவதே உன் வாழ்க்கை" என்பதை எனக்கு உணர்த்தினார். அந்த நாளிலிருந்து நான் முழுமையாக என்னை ஆண்டவருக்காக ஒப்புக்கொடுத்தேன். 2006ஆம் ஆண்டு, முழுநேர ஊழியத்தில் என்னை அர்ப்பணித்தேன்.

அதன்பிறகு என் ஊழியப் பயணம் எளிதாக இருக்கவில்லை. வறுமை, கஷ்டம், பொருளாதார நெருக்கடி ஆகியவை எங்கள் குடும்பத்தின் அன்றாட அனுபவமாக இருந்தன. என் பிள்ளைகளுக்குத் தேவையான உணவு, உடை கூட கொடுக்க முடியாத சூழ்நிலைகள் இருந்தன.ஆனால் ஒவ்வொரு முறையும் தேவன் அற்புதமாக எங்கள் தேவைகளைச் சந்தித்தார். தம்முடைய ஜனங்கள் மூலமாகவும், அற்புதமான வழிகளிலும் எங்களைப் பாதுகாத்து போஷித்தார்.

ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. என் தந்தையின் மறைவுக்குப் பிறகுகல்வி பெற முடியாததால், வேதாகமத்தைப் படித்து செய்திகளைத் தயாரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. சில நேரங்களில் மற்ற போதகர்களை சபையில் செய்திக்காக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அது என் மனதிற்கு சமாதானம் தரவில்லை. அதன்பிறகு நான் தேவனை முழுமையாகச் சார்ந்து கொண்டேன். பரிசுத்த ஆவியானவரே ஆசிரியராக இருந்து, வேதாகமத்தைப் புரிந்து கொள்ளும் ஞானத்தையும், தேவனுடைய வார்த்தையைத் தைரியமாகவும் அதிகாரத்துடனும் அறிவிக்கும் கிருபையையும் அளித்தார்.

ஆரம்பத்தில் என் குடும்பத்தினருக்கு ஊழியத்தின் தியாகங்களை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் தேவனுடைய கிருபை அவர்கள் இருதயங்களை மாற்றியது. இன்று அவர்கள் என் ஊழியத்தில் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாகவும், உறுதியான துணையாகவும் இருந்து வருகின்றனர். தேவனுடைய உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் மிகப்பெரிய சாட்சிகளில் ஒன்று, நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, எந்த இடத்தில் அடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன் அதேநிலத்தில் இன்று எங்கள் வீடும் சபையும் அமைந்துள்ளது.இன்று அதே இடம் சுவிசேஷம் அறிவிக்கப்படும் பரிசுத்த ஸ்தலமாகவும், அநேகர் இயேசு கிறிஸ்துவின் அன்பையும் வல்லமையையும் அனுபவிக்கும் ஆராதனை ஆலயமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் அவமானத்தின் இடமாக இருந்தது, இன்று தேவனுடைய மகிமையின் இடமாகியுள்ளது.

தேவனுடைய அழைப்பு எங்கள் அடுத்த தலைமுறையிலும் தொடர்வது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். என் மகன் பொறியியல் படிப்பை முடித்த பிறகு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தபோதிலும், அவற்றைத் விட்டு விட்டு முழுநேர ஊழியத்திற்கு தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டார். உலகப் புகழையும் வசதிகளையும் விட தேவனுடைய ராஜ்யத்தைத் தேர்ந்தெடுத்த அவரது வாழ்க்கை, தேவனுடைய உண்மைத் தன்மைக்கு இன்னொரு வல்ல சாட்சியாக உள்ளது. இன்று என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, வறுமையிலும், கஷ்டங்களிலும், ஒழுக்கப்படுத்துதலிலும், அற்புதங்களிலும், தேவைகளின் சந்திப்பிலும், வெற்றிகளிலும் தேவனுடைய கரம் என்னை ஒருபோதும் விட்டு விலகவில்லை என்பதை தெளிவாகக் காண்கிறேன். என் வாழ்க்கை சொல்லும் ஒரே உண்மை என்னவென்றால்—ஒருவர் இயேசு கிறிஸ்துவுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்து, அவருடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், தேவன் நினைக்கவும் கேட்கவும் முடியாத அளவிற்கு பெரிய காரியங்களை அவருடைய வாழ்க்கையில் செய்வார். என் வாழ்க்கை முழுவதும் தேவனுடைய கிருபைக்கே சாட்சி. எல்லா மகிமையும் ஒருவராகிய தேவனுக்கே உண்டாவதாக! ஆமென்.

Sample landscape Sample landscape Sample landscape Sample landscape Sample landscape Sample landscape