Jesus Power
Ministries

LUXORA GROUP

Ideas. Innovation. Impact.

Talk to Our Team

+91 98765 43210 hello@example.com

Mon–Sat: 9:00 AM–6:00 PM

Get Started
Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..

உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..

நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்... ஏசாயா 6:5

இன்றைய வேத பகுதி:ஏசாயா.6:1-8

 

​​​​​நம்மை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோ, நம்மைப் பிறர் மதிக்கவில்லை என்பதோ, பெரிய விஷயங்கள் அல்ல. முதலாவது நாம் நம்மை ஏற்றுக் கொண்டோமா என்பதே முக்கியம். முதலாவது நாம் நம்மை மதிக்கின்றோமா என்பதே முக்கியம். சிலர் தங்களைத் தாங்களே மட்டமாகவும், மதிப்பற்ற விதத்திலும் பார்த்து சலித்துக் கொள்வார்கள். ஆனால், மற்றவர்கள் தங்களை உயர்வாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

 

ஒரு தாய் தன் பிள்ளை அழகாயில்லாமலிருந்தாலும், அதிகத் திறமையில்லாமல் இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வாள். அந்த பிள்ளையைப் பார்த்து, நீ அழகாயில்லையே, நீ திறமையாயில்லையே, நீ மிக மோசமாயிருக்கிறாயே என்றெல்லாம் அவள் சொல்லிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? அவளும் சஞ்சலப் பிறவியாக மாறி, அந்தப் பிள்ளையையும் எதிர்காலம் இல்லாதவளாக்கிவிடுவாள். ஆனால், தாய் அப்படியிருப்பதில்லை. அவள் அழகில்லாக் குழந்தைக்கு அழகான தோற்றம் கிடைக்கச் சிரமப்படுவாள். திறமை குறைந்த பிள்ளைக்குத் திறமை கிடைக்கப் பிரயாசப்படுவாள்.

 

வேறு சிலரைப்போல நாம் இல்லாமலிருக்கலாம். வேறு சிலரிடம் காணப்படும் மதிப்பிற்குரிய விஷயங்கள், நம்மிடம் இல்லாமலிருக்கலாம். அங்கே நான் இப்படியிருக்கின்றேனே, எனக்கு எதையும் செய்யத் தெரியவில்லையே, நான் ஏன் எல்லோரைப் போல இல்லை, என்றெல்லாம் சலிப்புடன் சிந்தித்துக் கொண்டிருந்தால் நல்லது நிகழாது. நம்மிடம் இல்லாதவைகளைக் குறித்து சலித்துக் கொண்டே வாழ்ந்தால், மேலும் மேலும் மற்றவர்கள் நம்மை அற்பமாகப் பார்க்கவும், அலட்சியம் செய்யவுமே அது வழிவகுக்கும்.

 

ஒரு வியாபாரி, தன்னிடமுள்ள பொருட்களை மிகவும் தரமற்றதாகப் பிறருக்குச் சொல்லிக்கொண்டிருந்தால், யார் அதனை விரும்பி வாங்க முடியும்? நம்மை உயர்த்திக் காண்பிக்க விரும்புவது நல்லது அல்ல. அதே வேளையில், நம்மை மிகவும் தாழ்வானவர்களாகப் பார்ப்பதும், தாழ்வானவர்களாக பிறர் அறிய வைப்பதும் நல்லதல்ல. நம்முடைய மதிப்பை உயர்த்தவும், பிறர் நடுவில் நாம் அலட்சியம் செய்யப்படத்தக்கவர்கள் அல்ல என்று காண்பிக்கவும், ஆக்கப்பூர்வச் செயல்களை நாம் செய்ய வேண்டும். கர்த்தரும் நம்மை இருக்கிறபடியே அன்புடன் ஏற்றுக்கொண்டு, நாம் அவர் விரும்பத்தக்க நிலையை அடைவதற்காக, நம்மிடம் அவர் கிரியை செய்கின்றார்.

ஜெபம்:

அன்பின் பரலோகப் பிதாவே,

என்னை இருக்கிறபடியே அன்போடு ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு நன்றி. என்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, தாழ்வு மனப்பான்மையிலும் குறை உணர்விலும் வாழாமல் காத்தருளும். நீர் என்னை உமது சாயலின்படி படைத்து, ஒரு சிறப்பான நோக்கத்திற்காக அழைத்திருக்கிறீர் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க உதவி செய்யும்.

 

ஆண்டவரே, என்னுடைய பலவீனங்களையும் குறைகளையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். ஏசாயாவைப் பரிசுத்தப்படுத்தினதுபோல், என் இருதயத்தையும், என் உதடுகளையும், என் வாழ்க்கையையும் சுத்திகரித்து, உமக்குப் பிரியமான பாத்திரமாக மாற்றும். என்னுள் இருக்கும் பயம், தாழ்வு மனப்பான்மை, தகுதியின்மை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி, உமது அன்பிலும் கிருபையிலும் உறுதியாக நிற்கும் விசுவாசத்தைத் தாரும்.

நான் என்னை மதித்து, நீர் தந்த வரங்களையும் வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான வாழ்க்கை வாழ கிருபை செய்யும். என் வாழ்க்கையின் மூலம் உமது மகிமை வெளிப்படவும், "இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்" என்று உமக்குக் கீழ்ப்படிந்து வாழவும் உதவி செய்யும்.

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமென்.