எந்தச் சூழ்நிலையிலும் தாங்கும் தேவ கிருபை!
இன்றைய வேத பகுதி: சங்கீதம் 94:1-23
தேவனுடைய கிருபை என்பது, எந்தச் சூழ்நிலையில் எதைத் தேவன் நமக்கு அளித்தால், அந்தச் சூழ்நிலையை நாம் வெற்றியாகக் கடந்து போகமுடியுமோ, அதனை நமக்கு அளித்து ஆதரிப்பதுதான். எனவே, எந்த நிலைமையில் நாம் நிற்க நேரிட்டாலும், அந்த நிலைமையில் நம்மைத் தாங்கி நடத்தத் தேவன் எதையாவது செய்வார் என்பதே விசுவாசம்.சில நண்பர்களை தந்து நம்மை திருப்தியாக்குவதும் தேவ கிருபைதான். நன்மைகள் குறைந்து போனாலும் மனதில் குறைவின்றி, திருப்தியுடன் வாழ வைப்பதும் தேவகிருபைதான்.
ஒருவர் 80 வயதுகளைத் தாண்டின பின்பும் எந்த வியாதி பலவீனங்களுமின்றி ஆரோக்கியமாயிருக்கின்றார். இது கர்த்தருடைய சுத்த கிருபை என்கிறார்.
இன்னொருவர் ஐம்பதுகளிலேயே கால்வலி, முதுகுவலி, இரத்த அழுத்தம் என்று சரீர வருத்தங்களோடு வாழ்கின்றார். ஆனால் வியாதி பலவீனங்களின் நடுவிலும் கர்த்தரின் கிருபை தாங்குகிறது என்கிறார் இவர். இங்கே நாம் பார்ப்பது என்ன? ஒருவரை வியாதி பலவீனமின்றி வாழ வைக்கின்ற அதே தேவகிருபை, இன்னொருவரை வியாதி பல வீனங்களின் நடுவில் தாங்கி நடத்துகின்றது.
நல்ல ஆரோக்கியத்தோடிருப்பது கிருபை என்பதால், ஆரோக்கியமில்லாமிலிருப்பவர் கிருபை பெறாதவர் என்று அர்த்தமல்ல. தேவ கிருபை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுகிறது. பிரச்சினைகளை
வரவிடாமலும் கிருபை செயல்படமுடியும். பிரச்சனைகளைச் சந்தித்து விழாது நிற்கும்படியும் கிருபை செயல்பட முடியும். ஆபிரகாமிற்குச் செல்வ வளங்களைக் கொடுத்ததும்
தேவனுடைய கிருபைதான். அனைத்துச் செல்வங்களை இழந்த யோபுவை, நம்பிக்கையிழக்காதபடி தாங்கி நிற்க வைத்ததும் கிருபைதான்.
ஒருவேளை நீங்கள் ஆஸ்திகள் நிறைந்த ஆபிரகாமைப் போல வாழ விரும்பியும், எதுவுமில்லாத பவுலைப் போல வாழ நேரிட்டிருக்கலாம்.
அதற்காக வருந்தாதிருங்கள். உங்களின் தேவை தேவ கிருபைதான். தேவனே ஏன் என்னை இந்தச் சூழ்நிலையில் நீர் வைத்திருக்கின்றீர்? என்று கேட்காமல் இந்த சூழ்நிலையிலும் மனந்தளராமல் மகிழ்ச்சியுடன் வாழும் கிருபையைத் தாரும் என்றே கேட்க வேண்டும். எந்த சூழ்நிலையில் எதனைத் தந்தால் நம்மை மகிழ்ச்சியாக்க முடியும் என்பதைத் தேவன் அறிவார்.
ஜெபம்:
அன்பின் பரலோகப் பிதாவே,
எந்தச் சூழ்நிலையிலும் என்னைத் தாங்கி நடத்துகிற உமது கிருபைக்காக உமக்கு நன்றி. நான் இருக்கும் நிலைமையைப் பற்றி முறுமுறுக்காமல், உம்மை முழுமையாக நம்பி, மனந்தளராமல் மகிழ்ச்சியுடன் வாழும் கிருபையை எனக்குத் தாரும். என் பலவீனங்களில் உமது பெலனை வெளிப்படுத்தி, என் வாழ்க்கை உமக்கு மகிமையாய் இருக்க உதவிசெய்யும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.
ஆமென்.